திரு அவதாரப் படலம் - 300

bookmark

இலக்குவன் எனப் பெயரிடுதல்

300.

உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக்கொடியும் துயர் நீத்தனள்; இந்த.
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்.
‘இலக்குவன்’ என்ன. இசைத்தனன் அன்றே.
 
உலக்குநர்    வஞ்சகர்  -  இனி வஞ்சர்களாகிய அரக்கர்கள்தாம்
இறப்பவர்களாவார்;   உம்பரும்  உய்ந்தார்  -    தேவர்கள்  உய்வு
பெறுவார்கள்; நிலக் கொடியும் துயர் நீத்தனள் - நிலமகளும் துன்பம்
நீங்கினாள்;   விலக்க   அரும்  மொய்ம்பின் -(இத்தகைய  பேற்றை
உலகுக்குத்  தரும்)  நீக்க  இயலாத  வலிமை உடைய; இந்த விளங்கு
ஒளிநாமம் -இந்த விளங்குகின்ற ஒளியின் பெயர்; இலக்குவன் என்ன
இசைத்தனர் -இலக்குவன் என்று கூறினான்.

உலக்குநர்:     அழிபவர் (உலத்தல்:  அழிதல்).  உம்பர்: தேவர்கள்
இடவாகு  பெயர்.  நிலக்கொடி: நிலமகள்; கொடி:  உவமை  ஆகுபெயர்.
நீத்தல்: நீக்கல். மொய்ம்பு. வலிமை. இசைத்தனன்: கூறினான்.

சுமித்திரை     பெற்ற பிள்ளைக்கு  ‘இலக்குவன்’  என்று வசிட்டன்
பெயர்  சூட்டினான் என்பது கருத்து. ல?க்ஷ்மணன்  என்பதற்கு உத்தம
இலக்கணங்கள்    அமையப்    பெற்றவன்    எனவும்.    கைங்கரிய
லட்சுமியோடு  கூடியிருப்பவன்  என்பதும் பொருள் என்பர்.   நிலமகள்
துயரம் நீங்குவது உறுதியாதலில் ‘நீத்தனன்’ என்றார்.             119