திரு அவதாரப் படலம் - 301
சத்துருக்கன் எனப் பெயரிடுதல்
301.
‘முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்
எத் திருக்கும் கெடும்’ என்பதை எண்ணா.
‘சத்துருக்கன்’ எனச் சாற்றினன் நாமம்.
முத்து உருக்கொண்டு - முத்துக்கள் சேர்ந்து குழந்தை வடிவு
கொண்டு; செம்முளரி அலர்ந்தால்- செந்தாமரை தன்னிடம் மலரப்
பெற்றால்; ஒத்திருக்கும் எழில் உடை - (அதனை) ஒத்திருக்கும்
அழகுடைய; இவ்வொளியால் எத்திருக்கும் எண்ணா - என்பதை
எண்ணி; சத்துருக்கன் என நாமம் சாற்றினன்- சத்துருக்கன் எனப்
பெயர் சூட்டினான்.
முளரி: தாமரை. எழில்: அழகு. திருக்கு: மாறுபாடு (குற்றம்) நாமம்:
பெயர். சத்துருக்களை அழிப்பவன் என்பது பொருள். முதலடி:
இல்பொருள் உவமை. அகப்பகை - புறப்பகைகளை ஒழிக்க வல்லவன்
என்பதும் ஒரு பொருள். சத்துருக்கன் வெண்மை நிறமுடையவன்
என்பதால்‘’ முத்து உருக்கொண்டு’’ என்றார். கை. கால். முகம் மலர்ந்த
தாமரை ஒத்திருந்தது என்பதால்
‘’முளரி அலர்ந்தால் ஒத்து’’ என்கிறார். என்னா: செய்யாவகை
என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இவனுக்கு எதிராக எழுபவை
வேறு இன்மையின் இப்பெயர் அடக்கரு வலத்தவாகிய புலன்களை
வென்றவன் என்றும் கொள்ளலாம். ஏனெனில் பொறி புலன்கள்
அடங்கற்கரியன. 120
