திரு அவதாரப் படலம் - 289

bookmark

தசரதன் குழந்தைகள் முகம் பார்த்தல்

289.

மா முனிதன்னொடு. மன்னர் மன்னவன்.
ஏமுறப் புனல் படீஇ. வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி. வெண் சங்கம் ஆர்ப்புற.
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான்.
 
மன்னர்   மன்னவன்   ஏமுற- மன்னர்  மன்னனாகிய   தயரதன்
மகிழ்ச்சி  கொண்டு.;  புனல்படீஇ  -  குளிர்ந்த  நீரிலே   நீராடியபின்;
வித்தொடு    இன்பொருள்   - நெல்லும்   மற்றும்   இனிய   பல
பொருள்கையும்;  தாம்  உற  வழங்கி  - மிகுதியாகத் தானம் செய்து;
வெண்   சங்கம்  ஆர்ப்புற  - வெண்  சங்குகள்  முழங்க; மாமுனி
தன்னொடும்   -   குலுகுருவான   வசிட்ட  முனிவனோடும்;  குறுகி.
கோமகார்  திருமுகம் நோக்கினான் -சென்று. அரசிளங் குமரர்களின்
அழகிய முகங்களைப் பார்த்தான்.

மாமுனி:     வசிட்டன்.   மா:   பெருமை.   மன்னர்   மன்னவன்:
சக்கரவர்த்தி.  ஏம்உற:  மகிழ்ச்சி   தோன்ற  புனல்படீஇ: புனல் படிந்து
(அளபெடை).    குழந்தை    பிறந்ததைக்     கேட்டவுடன்    தந்தை
நீரிலே   நீராடி.   பின்    நெல்       முதலியவைகளைத்    தானம்
செய்து. பிறகு குழந்தையின்  முகம் காண வேண்டும்   என்பது   மரபு.
இதனால்  தென்புலத்தாராகிய   பிதிர்த் தேவதைகள்  மகிழ்ந்து   ஆசி
கூறுவராம். ‘வித்தொடு இன்  பொருள்’ நெல்    முதலிய     எட்டுவித
மங்கலப்  பொருள்கள்   எனவும் கூறுவர்.    மகார்:  மக்கள்.   குறுகி:
நெருங்கி. தயரதன் குலகுருவோடும் சென்று குழந்தைகளைப் பார்த்தான்
என்பது கருத்து.                                          109