திரு அவதாரப் படலம் - 286
சுமித்திரை சத்துருக்கனைப் பெறுதல்
286.
படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர. மறை நவில நாடகம்.
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட.
விடம் கிளர் விழியினாள். மீட்டும். ஈன்றனள்.
படம்கிளர் பல்தலைப் பாந்தள்- படம் பொலியும் பலதலைகளை
உடைய பாம்பாகிய ஆதிசேடன்; ஏந்து பார் நடம் கிளர்தர -
தாங்குகின்ற இவ்வுலகம் மகிழ்ந்து கூத்தாடவும்; மறை நாடகம் நவில -
வேதமும் அந்தக்கூத்தொலியையே செய்யவும்; விடம்கிளர் விழியினாள்
- விடம் போன்ற விழியை உடையவளான சுமித்திரை; மடங்கலும்
மகமும் வாழ்வின் ஓங்கிட - சிங்க ராசியும் மக நட்சத்திரமும்
வாழ்வில் மகிழ்ந்தோங்கவும்; மீட்டும் ஈன்றனள் - மறுபடியும்
ஓராண்மகவைப் பெற்றாள்.
படம்கிளர் பஃறலைப்பாந்தள்: படங்கள் கிளர்ந்துள்ள பல
தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடன் படம்: பணம் அதை
உடையதாதலின் பாம்புக்குப் ‘பணி’ என்பதும் ஒரு பெயருண்டு.
கிளர்தல்: நெருங்கி ஓங்குதல். நாடகம்: கூத்து (நடனம்) மடங்கல்:
சிங்கம். வாழ்வின் ஓங்கிட: வாழ்வு சிறக்க. ‘விடம்கிள விழி’
பெண்களின் கண்களை விடத்துக்கு ஒப்பிடுவது கவிமரபு. மீட்டும்:
மறுபடியும் ஏந்துபார்: வினைத் தொகை. சுமித்திரை மக
நட்சத்திரத்தில் சிங்க ராசியில் மீண்டும் ஒருபுத்திரனைப் பெற்றாள்
என்பது கருத்து. 106
