திரு அவதாரப் படலம் - 277
தசரதன் கலைக்கோட்டு முனியை வணங்குதல்
277.
அரிய நல் தவமுடை
வசிட்டன் ஆணையால்.
இரலை நல் சிருங்க மா
இறைவன் தாள் தொழா.
உரிய பற்பல உரை
பயிற்றி. ‘உய்ந்தனென்;
பெரிய நல் தவம் இனிப்
பெறுவது யாது?’ என்றான்.
அரிய நல்தவம் உடை- (தயரதன்) அரிய நல்ல தவத்தைச்
செய்துள்ள; வசிட்டன் ஆணையால் - தனது குலகுருவாகிய வசிட்ட
முனிவனது கட்டளைப்படி; இரலை நல்சிருங்கமா இறைவன் தாள்
தொழா - கலைக்கோட்டு முனிவனது பாதங்களைத் தொழுது; உரிய
பற்பல உரை பயிற்றி - தக்க பலப்பல துதிமொழிகளைத்தொழுது;
உரியனன் -உன்னால் நான் உய்வுபெற்றேன்; பெரிய நல்தவம் இனிப்
பெறுவது யாதுஎன்றான் - பெரிய நல்லதவத்தைச் செய்து நான்
பெறுவது இதைவிட வேறு என்ன இருக்கிறது என்று கூறினான்.
அரிய: பிறரால் செய்தற்கரிய (பெயரெச்சம்). இரலை: மான்.
சிருங்கம்: கொம்பு. நல்மா இறைவன்: நல்ல சிறந்த குரு. தொழார்:
தொழுது (செயா என்னும் வாய்பாட்டு வினைஎச்சம்) உரிய: தகுந்த.
உரை: துதிமொழிகள். பயிற்றி: சொல்லி. ‘பெறுவது யாது’ இதில் யாது
என்ற வினா எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. யாதொன்றும்
இல்லை என்பது கருத்து. 97
