திரு அவதாரப் படலம் - 278

bookmark

கலைக்கோட்டு முனி வழிக்கொண்டேகுதல்

278.

‘எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன்’ என்ன. ஒண் தவன்.
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி. தேர்மிசை
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான்.
 
எந்தை! நின் அருளினால்- எந்தையே! உமது அருள் துணையால்;
இடரின்  நீங்கியே உய்ந்தனன் அடியனேன் என்ன - துன்பங்களில்
இருந்து  நீங்கி  அடியவனாகிய   நான்   உய்ந்தேன்  என்று தயரதன்
சொல்லவே;ஒண்தவன் சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி- உயர்ந்த
தவத்தினனாகிய  கலைக்கோட்டு முனிவன்  நிறைந்த  மனமகிழ்ச்சியால்
மன்னனை வாழ்த்தி;வந்த மாதவ ரொடும் தேர்மிசை வழிக்கொண்டு.
ஏகினான்  -  தன்னுடன்  வந்த தவமுனிவர்களோடும். தேரேறி. தமது
உறைவிடம் நோக்கிச் செல்லலானான். 

‘எந்தை’  என்பதற்கு எனது தந்தை என்பது பொருளாயினும். இங்கு
ஆசிரியர்  என்னும்   முறைமையை உணர்த்துவதாகும். கலைக்கோட்டு
முனிவனது அருள் துணையால் மக்கட்பேறு  வாய்ப்பது உறுதியாதலின்
‘இடரின்   நீங்கியே  உய்ந்தனன்’  என்றான்.  ‘சிந்தையுள்   மகிழ்ச்சி’
என்றதால்.   மன்னன்   செய்த  குறையேதுமில்லாத   உபசாரங்களால்
மாமுனிவன்  மகிழ்ந்தான்  என்பதைக்  காட்டி  நின்றது.   ஒண்தவன்:
சிறந்த  தவத்தை  உடையவன்  (பண்புத் தொகை).  மிசை:  ஏழனுருபு.
வழிக்கொள்ளல்:   புறப்படுதலாம்.   முனிவன்   மனமார    மகிழ்ந்து
வாழ்த்தினான்  என்பதைச்  ‘சிந்தையுள்  மகிழ்ச்சி’   என்பது  குறித்து
நிற்பதுவும் ஆம்                                          98