திரு அவதாரப் படலம் - 276

bookmark

தசரதன் அவையில்வந்து வசிட்டனை வணங்குதல்

276.

முரசுஇனம் கறங்கிட. முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட. வேந்தர் சூழ்தர.
அரசவை அடைந்துழி. அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி. ஓங்கினான்.
 
முரசினம்     கறங்கிட -  முரசும்.  அதற்கினமான   பலவகை
வாத்தயங்களும் முழங்கவும்;முத்த வெண்குடை விரசி மேல் நிழற்றிட
-  முத்து  மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட  வெண்கொற்றக்   குடை
மேலே   நிழல்   தரவும்;   வேந்தர்   சூழ்தர  -  மன்னர் பலரும்
சூழ்ந்துவரவும்;  அரசு  அவை அடைந்துழி - தயரதன் அரசவையை
அடைந்தபோது;   அயனும்   நாண்உற   உரை செறிமுனிவன்  -
நான்முகனும்   நாணும்படி  பலரும்  புகழும்  புகழுரை   பொருந்திய
முனிவனான   வசிட்டனுடைய;   தாள்  இறைஞ்சி  ஓங்கினான்  -
பாதங்களை வணங்கிப் பெருமை எய்தினான்.

‘முரசினம்’     முரசும். அதன் இனமும் ஆகும். முத்த வெண்குடை
என்பதை  ‘வெண்முத்தக்குடை’ என மாற்றிப்பொருள்  கொள்க. விரச :
நெருங்க    (வினையெச்சம்).    நிழற்ற:     நிழல்கொடுக்க.   சூழ்தர:
‘அடைந்துழி’  இதில் ‘உழி’ காலத்தை உணர்த்தும்.  வேள்வியை நடத்த
வசிட்டனே     காரணம்     என்பதால்     அனைவரும்    புகழ்ந்த
புகழ்மொழிகளுக்கு   உரியவன்   என்பதால்   ‘உரைசெறி’   என்றான்.
வசிட்டனை  வணங்கிப்  பெருமை  எய்தினான்   மன்னன்  என்பதால்
‘ஓங்கினான்’ என்றான்.                                      96