திரு அவதாரப் படலம் - 266
பூதம் சுதைப் பிண்டத்துடன் எழுதல்
266.
ஆயிடை. கனலின்நின்று. அம் பொன் தட்டம் மீத்
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று. - சூழ்
தீ எரிப் பங்கியும். சிவந்த கண்ணும் ஆய்.
ஏயென. பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே.
ஆயிடை கனலின் நின்று - அப்போது அந்த வேள்வித்
தீயிலிருந்து; தீ எரிப்பங்கியும் சிவந்த கண்ணுமாய் - தீ எரிவது
போன்ற தலை மயிரும் சிவந்த கண்ணும் உடையதாக; பூதம் ஒன்று -
ஒரு பூதமானது; அம்பொன் தட்டம் - அழகிய ஒரு பொன்
தட்டத்தின் மேலே; தூய சுதை நிகர் பிண்டம் ஒன்று - தூய்மையான
அமுதத்தை ஒத்த ஒரு பிண்டத்தை; ஏந்தி ஏயென எழுந்தது -
தாங்கிக் கொண்டு விரைந்து எழுந்தது.
அ+இடை: ஆயிடை (செய்யுள் விகாரம்). மீ: மேலே. சுதை:
அமுதம். பிண்டம்: சோற்றுத்திரள் (பொன்தட்டிலே பாயசத்தை ஏந்தி
அப்பூதம் வந்தது என்பது வான்மீகி கூற்று). பூதம்: தோற்றம் என்னும்
பொருள் கொண்ட வட மொழிச் சொல்லாம். ஏய்: ஏய் எனச்
சொல்வதற்குள் (ஒரு அளவைக் குறிப்பு) கம்பர் இச்சொல்லைப் பல
இடங்களில் எடுத்தாண்டுள்ளார். 86
