திரு அவதாரப் படலம் - 267
கலைக்கோட்டு முனி பிண்டத்தை
மனைவியர்க்குப் பகிரச்சொல்லுதல்
267.
வைத்தது தரைமிசை. மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும். வேந்தனை.
‘உய்த்த நல் அமிர்தினை; உரிய மாதர்கட்கு.
அத் தகு மரபினால். அளித்தியால்’ என்றான்.
பூதம் தரை மிசை வைத்தது - (அவ்வாறு தோன்றிய) அந்தப்
பூதம் அப்பொன் தட்டத்தைத் தரையின் மேல் வைத்தது; மறித்தும்
அவ்வழி தைத்தது - திரும்பவும் வந்த விதமே அந்த வேள்வித்
தீயினுள் சென்று மறைந்தது; அத்தவனும் உய்த்த நல் அமிர்தினை-
அந்தக் கலைக் கோட்டு முனிவனும் பூதம் கொடுத்த நல்ல அமுதுப்
பிண்டத்தை; உரிய மாதர்கட்கு - உனக்குரிய பட்டத்து
அரசியர்களுக்கு; அத்தகு மரபினால் - மூத்தவள். இளையவள் என்ற
முறைப்படியே; அளித்தியால் என்றான்.-கொடுப்பாயாக என்று
கூறினான்.
தரை மிசை: வேள்விச் சாலையின் தரை மீது. அவ்வழி: அந்த
வழியே. தைத்தல்: குளித்தல் என்பதொரு பொருளும் உண்டு.
வேள்வித் தீயிலே சென்று குளித்தது என்பதும் ஒரு பொருள். ‘அம்பு
தைத்தது’ என்பது போல உய்த்த: சேர்த்த. வைத்த. செலுத்திய என்ற
பொருள் உடையது. இங்குப் பூதம் தரைமிசை வைத்த அமிர்தம்
‘‘என்பதால் வைத்து’’ என்று கொள்ளுதல் பொருந்தும். ‘அளித்தியால்’
இங்கு ‘ஆல்’ அசை. அளித்தி: கொடு. அத்தகு மரபின்: மரபாவது
மூத்தவளுக்கு முதலிலும். அதன் பின்முறைப்படி வழங்குதல்
என்பதாம். 87
