திரு அவதாரப் படலம் - 264
தசரதன் வேள்விச்சாலையிற் புகுதல்
264.
முழங்கு அழல் மும்மையும்
முடுகி. ஆகுதி
வழங்கியே. ஈர்-அறு திங்கள்
வாய்த்த பின்.
தழங்கின துந்துமி; தா
இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர்.
வெளி இன்று என்னவே.
மும்மையும் முழங்கு அழல்- (வேள்வி செய்யத் தொடங்கி) காலை.
பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் எழுகின்ற அந்த வேள்வித்
தீயில்; ஆகுதி முடுகி வழங்கி - அவிப் பொருள்களை விரைந்து
கொடுத்து; ஈரறு திங்கள் வாய்த்த பின்- பன்னிரண்டு மாதங்கள்
ஆன பின்பு; தாவில் வானகம் துந்துமிதழங்கின - குற்றமற்ற
வானத்திலே தேவ வாத்தியங்கள் ஒலித்தன;விண்ணவர் வெளி இன்று
என்ன விழுங்கினர் - தேவர்களும் இடைவெளி இல்லை எனுமாறு
(வானத்தை) மறைத்து நின்றனர்.
முழங்கு அழல்: ஒலித்து எழுகின்ற வேள்வித் தீ. சதுஷ்டோமம்.
உந்தியம். அதிராத்திரம் ஆகிய மூன்று வேள்வி மூன்று நாட்களும்
மூன்று காலத்தும் செய்யப்படுவனவாம். இவ்வாறு யாகம் நிறைவேற
ஓராண்டு சென்றது என்பதால் ‘‘ஈரறு திங்கள் வாய்ந்த பின்’’ என்றார்.
ஆகுதி வழங்கல்: அவிப் பொருள்களை யாகத் தீயில் பெய்தல்
‘‘வெளி இன்று என்ன விழுங்கினர்’’ என்பதற்கு இடம் நோக்கி.
விழுங்கினர்: மறைத்தனர் என்று உரை கூறப்பட்டது.
முழங்கு அழல்: வினைத்தொகை. வாய்த்தல்: பொருந்துதல்.
தழங்குதல்: ஒலித்தல். தாவில்: குறைதலில்லாத (குற்றமற்ற). ஈர்+அறு:
ஈராறு (பன்னிரண்டு) அஃதாவது ஓராண்டு. 84
