திரு அவதாரப் படலம் - 265

bookmark

புத்திரகாமயாகம் செய்தல்

265.

முகமலர் ஒளிதர் மொய்த்து. வான் உளோர்.
அக விரை நறு மலர் தூவி. ஆர்த்து எழ.
தகவுடை முனியும். அத் தழலின் நாப்பணே.
மக அருள் ஆகுதி வழங்கினான்அரோ.
 
வான்   உளோர்  முகமலர் ஒளிதர மொய்தது  -  வானுலகில்
வாழுகின்ற   தேவர்கள்   எல்லாம்  தங்கள்  முகங்களாகிய  தாமரை
மலர்கள்  ஒளி  தருமாறு  அங்கு  வந்து  நெருங்கி நின்று; அகவிரை
நறுமலர்  தூவி  -  உள்ளே  மணம்  மிகுந்த மலர்களைச் சொரிந்து;
ஆர்த்து  எழ  - ஆரவாரம்  செய்து  எழ; தகவு உடை முனியும் -
தகுதியுடைய  அந்தக் கலைக்கோட்டு முனிவனும்; தழலின் நாப்பண் -
அந்த   வேள்வித்   தீயின்   நடு   இடத்திலே;  மகவருள்  ஆகுதி
வழங்கினான்   -   பிள்ளைப்   பேற்றைத்   தரவல்ல  ஆகுதியைக்
கொடுத்தான்.

முகமலர்:     முகமாகிய மலர் என்பதால்  உருவகம்.  மொய்த்தல்:
நெருங்குதல். விரை: மணம். நறுமலர்: பண்புத்தொகை.  தூவி என்பதில்
‘தூ’  பகுதி.  நாப்பண்:  நடுவிடம்.  ஆர்த்து  ஆரவாரித்து.   ஆகுதி:
இங்குப்  ‘பூர்ணாகுதி’  யாம்.  தகவு:  தகுதி (வேள்வியை   நடைபெறச்
செய்யும்  தகுதியாம்).  அரோ:  அசை.  உள்ளோர்:  உளோர்   எனத்
தொகுக்கப்பட்டது. 

வானுவோர் -  தூவி  - மொய்த்து  -  எழ  -  முனியும் - ஆகுதி
வழங்கினான் என இயைக்க.                                  85