திரு அவதாரப் படலம் - 257

bookmark

தசரதன் கலைக்கோட்டு முனியைத் துதித்தல்

257.

‘சான்றவர் சான்றவ! தருமம். மா தவம். 
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும். இழப்பு இன்றாம்அரோ.’
 
சான்றவர்    சான்றவ- பெரியோர்களால் பெரியோனே!; தருமம்
மாதவம் போன்று ஒளிர் புனித - தருமத்தையும். தவத்தையும் போல
ஒளிர்கின்ற  புனிதனே!;  நின் புகழில்  பூத்த - உங்கள் அருளினால்
பரந்து  விளங்கும்; என் ஆன்ற தொல்குலம் - பெருமைமிக்க எனது
பழமை  வாய்ந்த  இந்தச்  சூரிய  குலம்;  இனி  அரசின் வைகும்-
(தங்கள்  வருகையால்) ஆட்சியில் நிலைபெற்று விளங்கும்; யான்தவம்
உடைமையும்  இழப்பின்றாம் - எனது தவம் பொருந்திய தன்மையும்
இழத்தல் இல்லாததாயிற்று.

சான்றவர்:     மேலோர் (சால்புடையவர்   என்பது கருத்து). ஆல்:
அசை.  தருமம்  போன்று பரந்த புகழுடைமையாலும்.  தவம் போன்று
கலங்காது  நிலைத்திருந்தலாலும்  ‘‘தருமம்.  மாதவம்   போன்றொளிர்
புனித’’ என்றார். பூத்தல்: பெருகல். தவம் உடைமையும்  இழப்பின்று -
தவமுடையன்   ஆகும்   தன்மையிலும்   இழப்பில்லை    என்பதும்
பொருளாகும்.

இன்று:     குறிப்பு  வினைமுற்று.  இதுவரை மகப் பேறின்மையால்
செய்தவம்   இழந்தவனாக   எண்ணியிருந்த    மன்னன்.   முனிவரது
வருகையால்  மகப்பேறு வாய்க்கும் என்னும்  உறுதியால்  ‘‘யான் தவம்
உடைமை இழப்பின்று’’ என்றானாகும். அரோ:  அசை. சூரிய குலத்தின்
பெருமையும்.    பழமையும்’’    ஆன்ற   தொல்குலம்’’    என்பதால்
புலனாகும்.                                               78