திரு அவதாரப் படலம் - 258
கலைக்கோட்டு முனி தன்னை அழைத்த
காரணம் வினாதல் (259-260)
258.
என்னலும். முனிவரன் இனிது நோக்குறா.
‘மன்னவர்மன்ன! கேள்; வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?’
என்னலும் முனிவரன் இனிது நோக்குறா- என்று தயரதன் கூறக்
கேட்டதும் அம்முனிவர் மன்னனை இனிமையுறப் பார்த்து; மன்னவர்
மன்ன! கேள் - மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக விளங்கும்
பெருமையுடையவனே! கேட்பாயாக; வசிட்டன் என்னுமோர் நல்
நெடும் தவன் துணை - வசிட்டன் எனப் புகழ் பெற்ற நல்ல. நீண்ட
தவத்தினை உடைய இம் முனிவனது துணையும்; நவையில்
செய்கையால் - குற்றமில்லாத நல்ல செய்கையும் உடைமையால்;
நின்னை இவ்வுலகில் நிருபர் நேர்வரோ-உனக்கு இவ்வுலகத்துப் பிற
மன்னர்கள் ஒப்பாவார் உண்டோ?
என்னல்: என்று சொல்லுதல். நோக்குறா: பார்த்து: செயா என்னும்
வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம். ‘‘தவன்துணை நவையில்
செய்கையால்’’ எனக் கூட்டி முனிவனது துணையாகிய குற்றமற்ற
செய்கையால் எனவும் கூறலாம். சூரிய குல வேந்தர்களுக்கு இந்த
வசிட்டனது நீண்ட காலம் தொடர்ந்துள்ள துணையைக் குறிப்பதாகும்.
நவை: குற்றம். நேர்தல்: ஒப்பாதல். நேர்வரோ என்பதில் ‘ஓ’
எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. செய்கையால்: நடத்தையால்.
ஒருவனை அவனது துணைவரையும் செய்கையையும் கொண்டே
உலகத்தவர் அளவிடுவர் நீ நல்ல துணையைப் பெற்றிருக்கிறாய்
நற்குண நற்செய்கைகளையும் உடையவனாய் இருக்கிறாய். எனவே.
உனக்கு நிகரான அரசர்கள் உண்டோ? என்கிறார் முனிவர். 79
