திரு அவதாரப் படலம் - 256
கலைக்கோட்டு முனியை உபசரித்தல்
256.
மா மணி மண்டபம் மன்னி. மாசு அறு
தூ மணித் தவிசிடை. சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி. கொள் கடன்
ஏமுறத் திருத்தி. வேறு. இனைய செப்பினான்;
மாமணி மண்டபம் மன்னி - உயர்ந்த மணிகளால்
அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபத்தை அடைந்து: மாசு அறு
தூமணித் தவிசிடை - குற்றமற்ற மணிகளால் அமைந்த
அரியணையில்; சுருதியே நிகர் கோமுனிக்கு அரசனை இருத்தி -
வேதத்துக் கொப்பான கோமுனி
யான கலைக் கோட்டு முனிவனை இருக்கச் செய்து; கொள்கடன்
ஏமுறத்திருத்தி - அம்முனிவன் ஏற்றுக் கொள்ளத்தக்க கடமைகளை
மனம் களிக்கும்படி திருத்தமாகச் செய்து; வேறு இனைய செப்பினான்
- வேறு சிறந்தவையான - பின்வருவனவற்றைக் கூறலானான்.
முதலடி முற்று மோனை. மண்டபம்: இங்கு வேத்தவை. மன்னி:
விளங்கி; மாசு: அழுக்கு (குற்றம்); தூ: தூய்மை; தவிசு: ஆசனம்
(இருக்கை); சுருதி: வேதம்; கொள்கடன்: வினைத்தொகை:
கடன்:கடமை: ஏமம்: அழகு ஏம் எனக் குறுகி நின்றது. திருத்தல்:
செய்தல்; செப்புதல்: கூறுதல் (திசைச் சொல் என்பர்). அரசர்
தலைவன். முனிவர் தலைவனையே உபசரித்தான் என்பது கருத்து.
மண்டபம் மன்னி. கோமுனிக்கரசனை - தவிசிடை இருத்தி -கடன்
திருத்தி - இனைய செப்பினான் என்று இயைக்க. 77
