திரு அவதாரப் படலம் - 255

bookmark

வசிட்டனும் கலைக்கோட்டு
முனியும் அவையை அடைதல்

255.

கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டனும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்.
 
கசட்டுறு வினைத்தொழில்- குற்றங்கள் விளைவிக்கும் செயல்களை
உடைய;  கள்வராய்  உழல் அசட்டர்கள் - கள்வர்களாகத் திரிகின்ற
அறிவிலிகள்  போன்ற; ஐவரை அறுவர் ஆக்கிய வசிட்டனும் - ஐம்
புலன்களையும்  அற்றுப்  போவாராகச் செய்த  வசிட்டனும்; அருமறை
வடிவு போன்று ஒளிர் விசிட்டனும் - அரிய வேதங்களின்  வடிவைப்
போல  விளங்கும்  சிறந்த  முனிவனான   கலைக்கோட்டு  முனிவனும்;
வேத்தவை  பொலிய மேவினார் -அந்த அரசவை பொலிவெய்துமாறு
அடைந்தனர்.

கசடு:  குற்றம். வினைத்தொழில்: செயல். கள்வர்: களவு செய்வோன்
வஞ்சகராவர். உழல் அசட்டர்: வினைத் தொகை. அசடர்:  அறிவிலிகள்
‘ஐவரை   அறுவர்  ஆக்கிய’  ஐம்புலன்களையும்   தத்தம்  நெறியில்
செல்லவிடாது  தடுத்து நிறுத்திய என்பது பொருள். ஐந்து.  ஆறு என்ற
எண்ணுப்  பெயர்களை  அமைத்த  நயம்   கருதத்தக்கது.   வசிட்டன்
என்பதற்கு அண்மையில் இருப்பவன் என்பது  பொருளாம்.  விசிட்டன்:
சிறந்தவன்.   அரிய   மறைகளெல்லாம்   திரண்டு    ஒரு    வடிவம்
கொண்டதெனத்   திகழ்பவன்  என்றது   கலைக்கோட்டு   முனிவனை.
வேந்து+அவை:    வேத்தவை.     வேந்தவைக்கு   இம்முனிவர்களால்
பொலிவுண்டாயிற்று என்பது கருத்து.

ஐவரை  அறுவராக்கிய  வசிட்டனும் - மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும் - பொலிய மேவினார் என்பது பொருள் முடிவு.        76