திரு அவதாரப் படலம் - 224

bookmark

224.

‘வளநகர் முனிவரன் வருமுன். வானவன்
களன் அமர் கடு எனக் கருகி. வான் முகில்.
சளசள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே
 
முனிவரன் வளநகர் வருமுன்- கலைக் கோட்டு  முனிவன்  அந்த
வளம்  பொருந்திய  நகருக்கு வரும் முன்னே; வான்முகில்  வானவன்
களன்  அமர்கடு  எனக் கருகி - பெரு மேகங்கள்.  சிவபிரானுடைய
கழுத்தில்  தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம்  கொண்டு.;  குளனொடு
நதிகள்தம்  குறைகள் தீர  -  குளங்களும். ஆறுகளும்  குறை தீரும்
படியாக; மழைத்தாரை சளசள எனக் கான்றன - மழைத் தாரைகளைச்
சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன.

வருமுன்:     வருமளவில் (அல்லது வருவதற்கு  முன்னமே)   முன்:
காலம்.  வானவன்:  பெரியோன்  (சிவபிரான்).  களவன்:  கழுத்து.  கடு:
நஞ்சு  குறைகள்  தீர.  நீரில்லாமையாகிய குறை நீங்க. குளன்:  ( ம-ன-
போலி).  சளசள:  ஒலிக்  குறிப்பு.  கான்றன:  சொரிந்தன.    முனிவன்
நகருக்கு வருவதற்கு முன்னே மழை பொழிந்தது என்பது கருத்து.    45