திரு அவதாரப் படலம் - 219

bookmark

219.

‘அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே.
கருந் தடங் கண்ணியர். கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு. “விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்” என. இனைய செய்தனர்.
 
அருந்தவன்   தந்தையை அற்றம் நோக்கியே-  அரிய தவத்தை
உடைய   கலைக்  கோட்டு  முனிவனது   தந்தையாகிய   விபாண்டகர்
இல்லாத  சமயம்  பார்த்து; கரும் தடம்  கண்ணியர்  கலைவலாளன்
இல்பொருந்தினார்-  கரிய. அகன்ற கண்களை உடைய  அப்பெண்கள்
எல்லாக்கலைகளிலும்    வல்லவராகிய     அம்முனிவரின்     குடிலை
அடைந்தனர்;  பொருந்துபு-  அங்ஙனம்  அடைந்த  போது;  விலங்கு
எனா  புரிந்து  இருந்தவர்-  மனிதர்களை  விலங்கினங்களோடு ஒப்ப
மதித்து இருக்குமவன். முனிவர்களே; இவர் என இணைய செய்தனன்-
இவர்கள் எனக் கருதிப் பின்வருமாறு செய்யத் தொடங்கினான்.

அற்றம்:     சமயம் (மறைவு).  கண்களால்   மயக்கி  வசப்படுத்தும்
தன்மையால்   கருந்தடங்  கண்ணியர்’  என்கிறார்.   கலை   வலாளன்
எல்லாக்   கலைகளிலும்   வல்லவன்   (கலைக்   கோட்டு   முனிவன்)
பொருந்துபு:  பொருந்த  (செய்பு  என்ற   வாய்பாட்டு   வினையெச்சம்
எனா:  என்று  (செயா  என்ற  வாய்பாட்டு)  வினனையெச்சம்.  தந்தை
இல்லாத  தருணத்தை  எதிர்பார்த்திருந்த அம்முனிவனது   உறையுளை
அடைந்த அப்பெண்கள். தன்னைப் போன்ற தவமுனிவர்கள்   இவர்கள்
எனக் கருதி உபசரிக்கத் தொடங்கினான் என்பது கருத்து.          40