திரு அவதாரப் படலம் - 220
220.
அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து.
“இருக்க” என. இருந்த பின். இனிய கூறலும்.
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா.
பொருக்கென எழுந்து போய். புரையுள் புக்கனர்.
அருக்கியம் முதலினோடு-அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு;
ஆசனம் கொடுத்து- அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து; இருக்க
என இருந்தபின்- அமர்வீராக என முனிவன் கூற அந்த மகளிர்
அமர்ந்ததன் பின்னர்; இனிய கூறலும்- இனிய உரையால் முகமன்
கூறி வரவேற்க; முருக்கு இதழ் மடந்தையர்- முருக்கம் பூப் போன்ற
உதடுகளை உடைய அப்பெண்கள்; முனிவரைத் தொழா- அந்த
முனிவனைத் தொழுது (பின்பு); பொருக்கென எழுந்து போய்-
விரைந்தெழுந்து சென்று; புரையுள் புக்கனர்- தமது பன்ன சாலையை
அடைந்தனர்.
அருக்கியம்- கைகழுவ நீர் தருதல். வீட்டுக்கு வந்த விருந்தினரை
உபசரிக்கும் முறைகளாக. கை கழுவவும். கால் அலம்பவும். வாய்
கொப்பளிக்கவும் நீர் தருதல் கூறப்படும் இவைகளை அருக்கியம்.
பாத்யம். ஆசமணீயம் என்பர் வடநூலார். அதனை இங்கு. கம்பரும்
‘அருக்கியம்’ என்றார். ஆசனம்- இருக்கை இனிய கூறல்: முகமன்
கூறுதல். முருக்கு: முள் முருங்கைப் பூ. பெண்களின் உதடுகளுக்கு இம்
மலரை உவமை கூறுவர். தொழா: தொழுது (செயா என்ற வாய்பாட்டு
வினையெச்சம்) பொருக்கென: விரைவுக் குறிப்புச் சொல். புரை: வீடு
இங்குப் பன்னசாலையைக் குறிக்கும்.
வந்த மகளிரை முனிவர்கள் எனக் கருதி- அருக்கியம் முதலியன
தந்தும் ஆசனமளித்தும் - முகமன் கூறியும் உபசரித்துக் கலைக்
கோட்டு முனிவனை அப்பெண்கள் தொழுது விரைந்தெழுந்ததும்
உறைவிடம் சென்றனர் என்பது கருத்து. 41
