திரு அவதாரப் படலம் - 218
218.
ஓசனை பல கடந்து. இனி ஓர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி.
பாசிழை மடந்தையர். பன்னசாலை செய்து.
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார்.
ஓசனை பல கடந்து- (மன்னனிடம் விடைபெற்றுச் சென்ற
அப்பெண்கள்) பல ஓசனை கடந்து சென்று; ஏசு அறுதவன் உறை
இடம்- குற்றமற்ற தவ முனிவன் வாழும் இடம் இதுவாகுமென; இனி
ஓர் ஓசனை என்றுழி- இனி ஒரு யோசனை தூரம் தானிருக்கிறது
என்று கூறப்படும் இடத்தில்; பன்ன சாலை செய்து- தழை. குழை.
கொம்புகளால் உறைவிடமமைத்து; பாசு இழை மடந்தையர்- பசிய
அணிகலன்களை அணிந்த அப்பெண்கள்; ஆசு அரும்
அருந்தவத்தவரின்-குற்றமறுத்த அரிய தவத்தினர் போல; வைகினார்-
அங்கு வாழத் தொடங்கினர்.
ஓசனை: யோசனை. ஏசு+அறு: ஏசறு: பிறரால் பழிப்பற்ற.
“பழிப்பதொழித்து” என்ற குறள் ஒப்பிடத்தக்கது. உழி: இடம்.
பசுமை+இழை: பாசிழை: பசுமையான அணிகலன்கள். பன்னசாலை:
இலைக்குடில் அரசனைத் தொழுது. தேரேறிச் சென்ற அம்மகளிர் பல
யோசனை தூரம் கடந்து- முனிவனிருக்குமிடத்திற்கு ஒரு யோசனை
தூரம் தானுள்ள தென்னுமிடத்தில் உறைவிடம் அமைத்து- தவ
முனிவர்களைப் போல வாழலானார் என்பது கருத்து. 39
