திரு அவதாரப் படலம் - 214
கலைக்கோட்டு முனியின் வரலாற்றை வசிட்டன் கூறுதல் (214-235)
214.
‘புத்து ஆன கொடு வினையொடு அருந் துயரம்
போய் ஒளிப்ப.- புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன். தயையினொடும்
தண் அளியின் சாலை போல்வான்.
எத்தானும் வெலற்கு அரியான். மனுகுலத்தே
வந்து உதித்தோன். இலங்கும் மோலி
உத்தானபாதன்.- அருள் உரோமபதன்
என்று உளன். இவ் உலகை ஆள்வோன்;
புத்தான கொடுவினை யோடு- புற்றுப் போலப் பெருகும் கொடிய
வினைகளும் அவற்றால் விளையும்; அருந்துயர் போய் ஒளிப்ப-
அரிய துன்பங்களும் சென்று நீங்க; புவனம் தாங்கும்- நாட்டைக்
காத்து ஆட்சி புரியும்; சத்தான குணம் உடையோன்- மிக
உண்மையான குணம் உடையவனும்; தயையினொடும் தண்ணளியின்
சாலை போல்வான்- தயைக்கும் தண்ணளிக்கும் இருப்பிடம்
போன்றவனும்; எத்தானும் வெலற்கு அரியான்- எம்முறையிலும்
பகைவரால் வெல்ல அரியவனும்; மனு குலத்தே வந்து உதித்தோன்-
மனுவின் குலத்தில் பிறந்தவனும் ஆன; இலங்கும் மோலி உத்தான
பாதன்- விளங்கும் மணிமுடி தரித்த உத்தான பாதன் என்னுமரசன்;
அருள் உரோம பதன் என்று- பெற்ற மகனான உரோம பதன்
என்னும் பெயர் பெற்ற; இவ்வுலகை ஆள்வோன் உளன்-
இவ்வுலகத்தை எல்லாம் ஆள்கின்ற அரசன் ஒருவன் இருக்கிறான்.
இது முதல் 21 பாடல்கள் உரோமபத மன்னன் வரலாறு
கூறுவனவாம். புத்து: புற்று (புத்தான: புற்றாக வளர்ந்து பெருகியுள்ள).
கொடுவினை: கொடிய வினையாம். சத்: உண்மை. சாலை: வழித்தடம்.
மோலி: மகுடம். குணமுடையோன். சாலை போல்வான்.
வெலற்கரியான். வந்துதித்தோன் இவை உத்தான பாதனுக்கு
அடைமொழிகள் உத்தான பாதன் மகன் உரோம பதன் ஆவான்.
மனுகுலம்: சுவாயம்பு மனுவின் குலம். கொடு வினை: பண்புத்தொகை. 35
