திரு அவதாரப் படலம் - 215

bookmark

215.

‘அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
   நெடுங் காலம் அளவது ஆக.
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம்
   பெருகுதலும். வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து. மா தானம்
   கொடுத்தும். வான் வழங்காது ஆக.
பின்னும். முனிவரர்க் கேட்ப. “கலைக்கோட்டு-
   முனி வரின். வான் பிலிற்றும்” என்றார்.
 
அன்னவன் தான் புரந்தளிக்கும் திரு நாட்டில்- அந்த உரோமபத
மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில்;  நெடுங்காலம்
அளவதாக  மின்னி  எழும் முகில் இன்றி- நீண்ட  கால  அளவாக.
மின்னி    எழுகின்ற    மேகங்கள்    இல்லாமையால்;   வெந்துயரம்
பெருகுதலும்-கொடிய துன்ப நோய் மிகவே; வேத நல்  நூல் மன்னும்
முனிவரை   அழைத்து-    அந்த   அரசன்.   வேதங்களையெல்லாம்
கற்றறிந்த முனிவர்களை  அழைத்து  வந்து;   மாதானம்  கொடுத்தும்
வான் வழங்காதாக-  அவர்களுக்கு   வேதங்களில்  கூறியபடி  சிறந்த
தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது  போகவே;  பின்னும்
முனிவர்க்   கேட்ப-   மறுபடியும்  முனிவர்களை  அழைத்து   மழை
பெய்விக்க வழி யாதெனக் கேட்க; கலைக்  கோட்டு முனிவரின் வான்
பிலிற்றும்  என்றார்-  கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு  மழை
பெய்யும் என்றார்கள்.

அன்னவன்:   அத்தகைய பெருமையுடையவன்  என்பது பொருளாம்.
தான்:   இங்கு  அசை.  மின்னலோடு  கூடிய  கார்  மேகமே    மழை
பொழிவதாதலால்   “பின்னியெழு   முகில்”  என்றார்.   வெம்+ துயரம்
வெந்துயரம்:  பண்புத்  தொகை.  வான்: இடவாகு பெயர் -  மேகத்தைக்
குறிக்கும்.  பிலிற்றல்:  பெய்தல்.  மாதானம்:  வேதங்களில்    கூறியபடி
செய்த உயர்ந்த தானங்கள். மன்னும்: நிலை பெற்ற.                36