திரு அவதாரப் படலம் - 204
204.
என்னை ஆளுடைய ஐயன்.
கலுழன்மீது எழுந்து போய
பின்னர். வானவரை நோக்கி.
பிதாமகன் பேசுகின்றான்;
“முன்னரே எண்கின் வேந்தன்
யான்”- என. முடுகினேன்; மற்று.
அன்னவாறு எவரும் நீர்போய்
‘அவதரித்திடுமின்’ என்றான்.
என்னை ஆளுடைய ஐயன்-என்னை ஆட்கொண்ட தலைவனாகிய
திருமால்; கலுழன் மீது எழுந்து பொய் பின்னர்- கருடன்மீது
எழுந்தருளிச் சென்றதன் பின்பு; பிதாமகன் வானவரை நோக்கிப்
பேசுகின்றான்- நான்முகன். தேவர்களைப் பார்த்துப் பேசலானான்;
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன்- முன்பே.
கரடிகட்கு அரசனான ‘சாம்பவந்தன்’ என்பவனாக நான் வந்து
பிறந்துள்ளேன்; மற்று. அன்னவாறு நீர் எவரும் போய்
அவதரித்திடுமின் என்றான்- மற்றும். அப்படியே நீங்கள் எல்லோரும்
சென்று அவதரித்திடுவீராக என்று கூறினான்.
உயிரினங்களின் தலைவர்களுக் கெல்லாம் தந்தை நான்முகன்
ஆதலின் ‘பிதாமகன்’ என பிரமனைக் கூறுதல் மரபு. என்னை
ஆளுடைய ஐயன் எனக் கூறியது. கம்பருக்குத் திருமாலிடம் மிகுந்த
ஈடுபாடு இருந்ததைக் காட்டும். முடுகினேன்: கிட்டினேன்
(வந்திருக்கிறேன் என்பது பொருள்). அவதரித்திடுமின்: மின்னீற்று
வியங்கோள் கட்டளைப் பொருளில் வந்தது. மற்று: வினைமாற்ற வந்த
அசைச் சொல். அன்று ஆறு: அந்த விதமாக (அவ்வாறே). 25
