திரு அவதாரப் படலம் - 205

bookmark

205.

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான். ‘எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்’ என்ன;
இரவி. ‘மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்’
                                    என்று ஓத
அரியும். ‘மற்று எனது கூறுநீலன்’ என்று அறைந்
                                   திட்டானால்
 
தருஉடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான்-கற்பகம்  முதலிய ஐந்து
மரங்களையுமுடைய         தேவர்களுக்கு   அரசனான     இந்திரன்
சொல்லலுற்றான்; எனது  கூறு மருவலர்க்கு அசனி அன்ன வாலியும்
மகனும்  என்ன-  எனது அம்சமானது.  பகைவர்களுக்கு  இடி போன்ற
வாலியும். அவன் மகன் அங்கதனும் ஆகும்  என்றுரைக்க; இரவி மற்று
எனது  கூறு அங்கு அவர்க்கு  இளையவன்  என்று  ஓத- சூரியன்.
பின்னை.  எனது  அம்சம்  அங்கேயே   அந்த  வாலிக்குத் தம்பியான
சுக்கிரீவன்  என்று சொல்ல; அரியும் மற்று எனது  கூறுநீலன் என்று
அறைந்திட்டான்- நெருப்புக் கடவுள் பின்னை. எனது  அம்சம் ‘நீலன்’
என்னும் வானர வீரனாகும் எனக் கூறினான்.

ஆல்:     அசை. கூறு: பாகம் (அம்சம்). மருவலர்:  பகைவர்.  அரி:
நெருப்பு  கடவுள்:  மனம். மொழி.  மெய்களின்  உணர்வுகளைக் கடந்து
நிற்கும்   பரம்பொருளைக்    குறிப்பதாயினும்   உபசாரமாக  மற்றைத்
தேவர்களையும் குறிப்பதாகும்.

இந்திரன்     வாலி. அவன் மகன் அங்கதன் ஆகிய  இருவராகவும்.
சூரியன்  வாலியின்  தம்பி  சுக்கிரீவனையும்.   அக்கினி.  நீலன் என்ற
வானரத் தலைவனாகவும் பிறப்பதாகக் கூறினர் என்பது கருத்து.     26