திரு அவதாரப் படலம் - 201

bookmark

201.

‘வளையொடு திகிரியும். வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்.
இளையவர்கள் என அடி பரவ ஏகி. நாம்.
வளைமதில் அயோத்தியில் வருதும்’ என்றனன்..
 
வளையொடு     திகிரியும்-  எமது   படைக்கலங்களான  சங்கும்
சக்கரமும்; வடவை தீதர விளைதரு கடு உடை  விரிகொள்பாயலும்-
வடவா   முகாக்கினியும்   தீய்ந்து  போகச் செய்யும் நஞ்சினை உடைய.
எமதுபடுக்கையான    அனந்தனும்; இளையவர்கள் என  அடி  பரவ-
தம்பியராகப்   பிறந்து   எம்மை   அடிவணங்க;   ஏகி.  வனைமதில்
அயோத்தியில் வருதும் என்றனன்- பூமியில் சென்று சுற்றும் வளைந்த
மதிலை உடைய அயோத்தி மாநகரில் அவதரிப்போம் என்றான்.

‘வினையொடு’என்பதிலுள்ள     ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது.
வளை:  சங்கு.  வளைந்திருப்பது  காரணமாக  இப்பெயர்  அமைந்தது.
கடல்   நடுவே   ஒரு   குதிரை  இருப்பதாகவும்.  அதன்   முகத்தில்
தோன்றும்    தீயில்   கடல்   நீர்   வற்றிக்   கொண்டிருப்பதாகவும்
கூறுவர்.வடவை  முகத்தில்  தோன்றும்  தீ  என்பதால்  “வடவைத் தீ”
என்றார்.  தடு:  நஞ்சு. பாயல்: படுக்கை. விரிகொள்: விரிதலை உடைய
சக்கரம்    பரதனாகவும்.    சங்கு   சத்துருக்கனாகவும்.    அனந்தன்
இலக்குவனாகவும்  வந்தனர்  என்பார்.  அயோத்திக்கு ‘சாதேகம்’ என்ற
ஒரு பெயரும் உண்டு.                                      22