திரு அவதாரப் படலம் - 200

bookmark

200.

‘மசரதம் அனையவர் வரமும். வாழ்வும். ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய. யாம்.
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்.
தசரதன். மதலைவாய் வருதும் தாரணி.
 
மசரதம்     அனையவர்  -  கானல்   நீரைப்போன்றவர்களாகிய
அரக்கர்களுடைய;  வரமும்  வாழ்வும்-  வரபலத்தையும். வாழ்வையும்;
நிசரத கணைகளால்  நீறு செய்ய-  எமது   குறிதவறாத அம்புகளால்
சாம்பலாக்க (அழிக்க); யாம் கசரத துரகமாகக் கடல் கொள்காவலன்-
யாமே.    யானை.   தேர்.   காலாள்   என்னும்   கடல்    போன்ற
நாற்பெருஞ்சேனைகளையுடைய  வேந்தனான;  தசரதன்   மதலையாய்
தாரணிவருதும்-     தயரதன்    புத்திரனாக    உலகத்தில்     வந்து
அவதரிக்கின்றோம்.

மசரதம்:  பேய்த்தேர் (கானல்நீர்). நிசரதம்: உண்மை.  நிசரத கணை:
உண்மையான அம்புகள் (பொய்யாது தாக்கவல்லது).  நீறு: சாம்பல்.  நீறு
செய்தல்:   அழித்தலாம்.   தாரணி:  பூமி.  பத்துத்  தேர்    கொண்டு.
தன்னுடன்  போர்புரிந்த சம்பானை வென்றவன் என்பதால்   “தசரதன்”
என்று  பெயர்  பெற்றான்  என்பர்.  தசம்:  பத்து.  ரதன்:   ரதங்களை
வென்றவன்.   வெஞ்சினத்து  அவுணர்  தேர்பத்தும்    வென்றுளேன்”
என்பது தயரதன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதாகும்.

மதலை:     விழுது. புதல்வருக்கு  ஆகிவந்தது  உவமையாகுபெயர்.
வருதும்:   தன்மைப்   பன்மை   வினைமுற்று   யாம்   வருதும்  என
முடியும்.                                                  21