திரு அவதாரப் படலம் - 194
194.
பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற.
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்.
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து. அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான்.
பொன்வரை இழிவதோர் புயலின் பொற்பு உற - பொன்
மலையாகிய மேருவிலிருந்து கீழே இறங்குகின்ற ஒரு மேகத்தின்
அழகுதோன்ற; என்னை ஆள் உடையவன் தோள் நின்று- என்னை
ஆளாக ஆட்கொண்டிருக்கும் கலுழனுடைய தோள்களில் இருந்து;
வான்தடவும் சென்னி மண்டபத்தில் சேர்ந்து - ஆகாய மளாவிய
சிகரத்தை உடைய அம் மண்டபத்தை அடைந்து; அரிதுன்னு
பொற்பீடமேல் - சிங்கவடிவுடைய பொன் ஆசனத்தின் மேல்;
எம்பிரான் பொலிந்து தோன்றினான்- எம்பெருமானாகிய திருமால்
பொலிவுறத் தோன்றலானான்.
பெரிய திருவடி என்றழைக்கப்படும் திருமாலின் ஊர்தியான
கருடனை “என்னை ஆளுடையவன்” என்று சிறப்பிக்கிறார்.
‘பொன்வரை’ என்று கூறுவதால் கருடனது நிறமும் மேன்மையும்
புலனாகும். அரிதுன்னு பொற்பீடம்: சிங்காதனம்.
‘தேவர்கள் இருந்த இடத்தில் வந்து காட்சிதந்த திருமால் கருடனது
தோளிலிருந்து இறங்கி அம்மண்டபத்தே இடப்பட்ட
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்’ என்பது கருத்து. தோள்: பிடர்
அரி: சிங்கம் (எல்லா மிருகங்களையும் அழிக்க வல்லது) 15
