திரு அவதாரப் படலம் - 195

bookmark

195.

விதியொடு முனிவரும். விண்ணுளோர்களும்.-
மதி வளர் சடைமுடி முழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து. அயல் அருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர்தம் கொடுமை கூறினார்.
 
விதியொடு     முனிவரும் விண் உளோர்களும் - நான்முகனும்.
முனிவர்களும்  விண்ணுலகில் வாழும் தேவர்களும்;  மதிவளர்சடைமுடி
மழுவலாளனும்-   பிறைச்   சந்திரன்   வாழும்   சடை   முடியுடைய.
மழுவாளியான சிவபிரானும்; அதிசயமுடன் உவந்து அயல்  இருந்துழி
-   மிகுந்த   வியப்புடன்.   மகிழ்ந்து  திருமாலுக்கு    அருகிலமைந்த
ஆசனங்களில்   இருந்த   போது; கொதிகொள்வேல்    அரக்கர்தம்
கொடுமை   கூறினார்-  கொதிக்கும்  வேலை  உடைய  அரக்கர்களது
கொடுந்தொழிலைச் சொன்னார்கள்.

‘கூறினார்’     யார் என்பதற்கு 18ஆம் பாடலில்  வரும்  ‘வானவர்’
என்பதை   எழுவாயாகக்  கொண்டு   பொருள்  கொள்க.  ‘விதியொடு’
என்பதிலுள்ள  ‘ஒடு’  உம்மைப் பொருளில்  வந்தது. ‘விதியும்’  என்பது
பொருளாம். சாபத்தால் நாள்தோறும் கலைகள்  தேய்ந்த   சந்திரனுக்குத்
தனது  சடையில்  இடம்தந்து  வளரச்செய்தவன்  சிவபிரான்  ஆதலால்
‘மதி  வளர்  சடை  முடி’  என்றார்.   கொலைத்தொழிலே  தொழிலாக
உடைய  அரக்கர்.  தங்கள்   வேல்களை  அடிக்கடி   கொல்லுலையில்
கொதிக்க வைப்பதால் “கொதிகொள்வேல்” என்றார்.              16