திரு அவதாரப் படலம் - 192
192.
எழுந்தனர்- கறைமிடற்று இறையும். தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும்- சென்று. எதிர்
விழுந்தனர் அடிமிசை. விண்ணுளரொடும்;
தொழும்தொறும். தொழும்தொறும். களி துளங்குவார்
கறைமிடற்று இறையும்- நீலகண்டனாகிய இறைவனும்; தாமரைச்
செழும்தவிசு உவந்த அத்தேவும்- தாமரையாகிய செழித்த
ஆசனத்தனை விரும்பி அமர்ந்திருக்கும் நான்முகனும்; அடிமிசை
விழுந்தனர்-திருமாலின் திருவடிகளை வணங்கி; விண்ணுளோரொடும்-
தேவர்களொடும்; எழுந்தனர் எதிர் சென்று- எழுந்தவர்களாகி. அங்குத்
தோன்றிய திருமாலுக்கு எதிரே சென்று. அவரை; தொழும்தொறும்
தொழும் தொறும்-துதித்துத் தொழும் போதெல்லாம்; களிதுளங்குவர்-
மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர்.
சிவபெருமானும். நான்முகனும். தேவர்களும் திருமாலுக்கு எதிரே
சென்று அடிதொழுது. துதித்து. தொழும் போதெல்லாம் மகிழ்ச்சியில்
திளைத்து ஆடுவாராயினர் என்பது கருத்து. கறை: நஞ்சு. மிடறு:
கண்டம். கறைமிடற்றிறை: சிவபிரான். தேவு: தெய்வம். அடிமிசை:
மிசை ஏழனுருபு. துளங்கல்: அசைதல் இங்கு ஆடுதலைக் குறித்தது.
இறை: ஈசன் தலைவன் மேம்பாடுடையவன் என்னும் பொருள்
கொண்டது. கறைமிடற்றிறை என்பதற்கு மாறாகக் கடவுளர்க்கு இறை
என்ற பாடமும் உண்டு. 13
