திரு அவதாரப் படலம் - 193

bookmark

193.

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
சூடினர். முறை முறை துவளத் தாள்- மலர்.
 
அரக்கர் வீடினர் என்று உவக்கும் விம்மலால்-அசுரர்கள் இறந்து
பட்டார்கள்   என   மனம்   மகிழும்   பொருமலால்;   உவகையாம்
நறவுஉண்டு  ஓர்கிலார்-  (அத்தேவர்கள்) மகிழ்ச்சி என்னும்  தேனைப்
பருகி.   எதுவும்   அறியாதவர்களாய்;  ஆடினர்   பாடினர் அங்கும்
இங்குமாய்   ஓடினர்-   ஆடியும்.   பாடியும்   அங்கும்   இங்குமாய்
ஓடினவர்களாக; துளவத்தாள மலர்முறை முறை சூடினர்- அப்பரமனது
துழாய்  மணக்கும்   பாத  மலர்களை  வரிசை   வரிசையாகச்  சென்று
வணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள்.

களிப்பு     மிகுந்தவர்கள்   ஆடுதலும்   பாடுதலும்  இயற்கையாம்.
‘பரமனது  தரிசனமே  தமது  துயரைப்  போக்கும்’   என்ற  நம்பிக்கை
உடையவராதலால்  துயருக்கே  காரணமான  அரக்கர்  அழிவர்  என்ற
மகிழ்ச்சி   மிகுதியால்   ஆடிப்பாடி   உவந்தனர்   என்பது   கருத்து.
உவகையை நறவாக உருவகித்தார். விம்மல்: பொருமல்.             14