திரு அவதாரப் படலம் - 187
187.
வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.
வடவரைக் குடுமியின் நடுவண் - மேருமலையின் சிகரத்தின்
மத்தியிலே; மாசு அறு சுடர்மணிமண்டபம் துன்னி - குற்றமற்ற
ஒளிமிகுந்த மணிகளாலமைந்த மண்டபத்தை அடைந்து; நான்முகக்
கடவுளை அடிதொழுது- (அங்கு வந்து சேர்ந்த) பிரமனை
அடிவணங்கி; அமரகண்டகர்- தேவர்களுக்குப் பகைவர்களான
அரக்கரது; இடிநிகர் வினையம் அது- இடிபோன்ற அக்கொடும்
செயல்களை; இயம்பினான்- சொல்லலானான்.
வடவரை: மேருமலை. தேவர்கள் தன்னைக் காணவருவதை அறிந்த
நான்முகன் மேருமலைச் சிகரத்தில் - மணிமண்டபத்தில் வந்து
தங்கியிருந்தான். தேவர்கள் உடன்வர. சிவபெருமான் அங்குச் சென்று
அரக்கர்தம் கொடுஞ்செயலைக். கூறினார் என்பது கருத்து.
மாசறு சுடர் மணிமண்டபம்: தேவர்கள் கூடி ஆலோசிக்கும்
மண்டபம். கண்டமுகம்: முள் அரக்கர்கள் முள் போன்று துன்பம்
விளைவிப்பவர் என்பதால் ‘கண்டகர்’ என்றார்.
வினை: செயல். ‘அம்’ சாரியை பெற்று ‘வினையம்’ என வந்தது
வரை: இருமடி யாகு பெயராய் மலையைக் குறித்தது. அரோ: அசை. 8
