திரு அவதாரப் படலம் - 186
வசிட்டன் மனத்தில் கருதிய தேவலோக
நிகழ்ச்சிகள் (186-208)
186.
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்
சுடுதொழில் அரக்கரால் - சுடுகின்ற தொழிலை உடைய
அரக்கர்களால்; வான் உளோர் தொலைந்து- வானுலகில் வாழும்
தேவர்கள் வாழ்வறிந்து; சுடு அமர்களன் அடிகலந்து
கூறலும்-நஞ்சுதங்கிய மிடற்றை உடைய சிவபெருமானது பாதங்களை
அடைந்து தமது துன்பத்தைக் கூறலும்; படு பொருள் உணர்ந்து
அப்பரமன்- மேலே நிகழவேண்டியவைகளை முன்னரே உணர்ந்துள்ள
அப்பெருங்கடவுளான சிவபெருமான்; இனியான் அடுகிலேன்
எனமறுத்து- இனி யான் அரக்கருடன் போர்புரிய மாட்டேன் என
மறுத்து உரைத்து; அவரொடும் ஏகினான்- அவ்வமரர்களுடன்.
நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.
நினைக்கும் மனத்தையும் சுடக்கூடிய அத்துணைக் கொடுந்தொழில்
என்பார் ‘சுடு தொழில்’ என்றார். சுடு: நஞ்சு. களன்: கழுத்து.
பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் நஞ்சைத் தானுண்டு. தேவர்களைக்
காத்தார் என்பதைக் குறிப்பிடுவதிது. படுபொருள்: மேல்நிகழும்
நிகழ்ச்சி. சிவபெருமானைப் பரமன் (பெருங்கடவுள்) எனக் கூறும்
கம்பரது சமய சமரசக் கொள்கை அறிந்து மகிழ்தற்குரியது.
‘படுபொருள்’ என்றது ‘அரக்கர் இனி இன்னாரால் அழிபடுவார்கள்’
என்ற அவ் உண்மையை அறிந்தமையால் தான் அடுகிலேன் என்றான்.
என்றார். 7
