திரு அவதாரப் படலம் - 185
185.
அலை கடல் நடுவண். ஓர் அனந்தன் மீமிசை.
மலை என விழி துயில்வளரும் மா முகில்.
‘கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்’ என்று.
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை.
அலைகடல் நடுவண்-அலைகள் மிகுந்துள்ள பாற்கடல் நடுவே; ஓர்
அனந்தன் மீமிசை- ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை மேலே;
மலை என விழிதுயில் வளரும்- கரியமலை போல. கண்வளர்கின்ற;
மாமுகில்- பெரிய மேகம் போன்ற (நிறமும். செயலுமுடைய) திருமால்;
‘கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை திர்ப்பென்’. என்று-
உயிர்களைக் கொல்லுதலே தொழிலாக உடைய அரக்கரின்
கொடுமையைத் தீர்ப்பேன் என்று; உலைவு உறும் அமரருக்கு-
அவ்வரக்கர்களால் வருந்தும் தேவர்களுக்கு; உரைத்த வாய்மையை-
சொன்ன வாக்குறுதியை
முந்திய பாடலில் ‘எண்ணினான்’ என்பதனுடன் “வாய்மையை”
என்பது முடிகிறது. அலைகடல் என்று பொதுவாகக் கூறினாலும்.
திருமாலின் உறைவிடமான ‘பாற்கடல்’ என்று பொருள்
உரைக்கப்பட்டது. மீமிசை: உருபின் மேல் உருபு வந்து ‘மிக மேலே’
என்ற பொருள் தந்து நின்றது. ‘மலை’ என்ற பொதுச்சொல்லும்
திருமாலைக் குறிப்பதாதலின் ‘கரியமலை’ என்ற பொருளை
உடையதாயிற்று. தேவர்களுக்கு அரக்கரால் மரணமில்லை என்பதை
உணர்த்த ‘அமரர்’ என்றார். அமரர்: மரணமற்றவர். வல்மை:
வாக்குறுதி. அடுத்து வரும் 23 பாடல்கள் தேவர்களுக்குத் திருமால்
வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும். 6
