திரு அவதாரப் படலம் - 184

bookmark

திருமால் கொடுத்த வரத்தினை வசிட்டன்
நினைத்தல் (184-185)

முனிவன் முன்னிய
 
184.

முரசு அறை செழுங் கடை. முத்த மா முடி.
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்.
விரை செறி கமல மென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்-
 
முரசு     அறை  செழுங்கடை- முரசு  முழங்கும்  கடைவாயிலை
உடையவனும்;  முத்தமாமுடி  அரசர் தம்கோமகன்-  முத்து  முதலிய
மணிகளால்   அமைந்த   மணிமுடி   தரித்திருப்பவனுமான.    மன்னர்
மன்னனாகிய  தயரதன்; அனைய கூறலும் - அத்தகைய   சொற்களைச்
சொல்லும் (அது கேட்ட); விரை செறிகமலமென் பொகுட்டு  மேவிய-
மணம்    செறிந்த    தாமரை     மலரின்     அகவிதழ்   உச்சியில்
அமர்ந்திருப்பவராகிய;  வரசரோருகன் மகன்- மேலான நான்  முகனது
மகனாகிய  வசிட்டன்;  மனத்தில் எண்ணினான்- (பின்வருவனவற்றை)
தனது மனத்திலே நினைப்பானாயினான்.

முரசு:   கொடை. போர். மணம் என்று மூன்று வகையினது.  இங்குச்
செழுங்கடை   என்றதால்   கொடை  முரசே  முழங்கியது    எனலாம்.
முத்தமாமுடி;  என்று  கூறினும்  ‘ஒரு  ழொழி  தன்   இனம்  சுட்டும்’
என்றபடி    ஏனைய    மணிகைளையும்     கொள்ளலாம்.    “அரசர்
நம்கோமகன்”   சக்கரவர்த்தி   என்ற    பொருளில்   வந்தது.  வாம்:
மேன்மை.   சரொருகம்:  தாமரை.  நீரில்   முளைப்பது   (சரம்-  நீர்;
ருகம்-முளைப்பது)    அதிலமர்ந்துள்ள    பிரமனுக்குப்    பெயராகும்.
‘மனத்தில்  எண்ணினான்’  என்றது.  தான்  முன்பே அறிந்த தாயினும்
அதனை     வெளிப்படுத்தலாகாமையால்     “மனத்திலெண்ணினான்”
என்றார். 

மகப்பேறின்மை     குறித்து.  மன்னன் வசிட்டனிடம்  கூறி. வருந்த.
அதைக்  கேட்ட  அம்மாமுனிவன்.   தேவர்களுக்கு  முன்பு   திருமால்
அருளியதைச் சிந்தித்தான் என்பது கருத்து.                      5