திரு அவதாரப் படலம் - 183

bookmark

183.

‘அருந் தவ முனிவரும். அந்தணாளரும்.
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும். என் அகத்தை’ என்றனன்.
 
அருந்தவ    முனிவரும் - அரியதவத்தை உடைய  முனிவர்களும்;
அந்தணாளரும்-   அறவோர்களாகிய   அந்தணர்களும்;  வருந்துதல்
இன்றியே- யாதும் வருத்தமுறுதல் இல்லாமலே; வாழ்வின் வைகினார்-
துன்பமற்று   நல்வாழ்விலே   இருந்தார்கள்;   என்பின்   இருந்துயர்
உழக்குநர்-  (மக்கள்  பேறில்லாத)  எனது  ஆட்சிக்குப்   பிறகு (அப்
பெரியவர்கள்)  மிகவும்  துன்பத்தாலே  வருந்துவார்களே;  என்பதோர்
அருந்துயர்- என்பதொரு அரியதுயரமானது; என் அகத்தை வருத்தும்
என்றனன்- எனது மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது என்றான்.

அருந்தவம்      அருமைத்தவம்    என்றதில்   ‘மை’   கெட்டது.
அந்தணாளர்:   அந்தண்மையை   ஆளுபவர்    எனவே   அறவோர்.
வைகினார்:  நிலைத்து  உள்ளார்  என்பதும்   பொருளாம்.  இருந்துயர்:
மிகுந்த   துன்பம்.  ‘இரு’  மிகுதியை  உணர்த்தி  நின்றது    என்பின்:
எனக்குப்  பிறகு.  வருத்தும்:  வருந்தச்  செய்யும்   என்பது  பொருள்.
வாழ்வின்: வாழ்வு என்பதற்கு நல்வாழ்வு என்பது பொருள்.

தானும்.   தனது முன்னோரும் காத்த நெறிகளைத் தனக்குப்  பிறகும்
பேணிக்காத்து.    தனது     நற்குணங்களையே    பெற்று    நாட்டை
நன்னெறியில்   நிறுத்தி.   ஆள.  ஒரு  புத்திரன்  வேண்டுமே   என
நினைத்த தயரதன் நல்லதந்தையாகத் திகழ்கிறான் எனலாம்.         4