திரு அவதாரப் படலம் - 181

bookmark

181.

‘எம் குலத் தலைவர்கள். இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்.
மங்குநர் இல் என. வரம்பு இல் வையகம்.
இங்கு. நின் அருளினால். இனிதின் ஓம்பினேன்.
 
எம் குலத்தலைவர்கள்-எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும்;
இரவிதன்னினும் -  தமது   குல  முதல்வனான  சூரியனை  விடவும்;
தம்குலம்   விளங்குற -   தங்கள்   குலம்   விளக்க  முறும்படியாக;
தரணிதாங்கினார்-   இவ்வுலகை  ஆதரித்துக்   காத்தனர்;  மங்குநர்
இல்என-  புகழில்  மயங்கியவர்கள்  இல்லை  என்னுமாறு;  வரம்பில்
வையகம்   -  எல்லைகாண  இயலாத  இவ்வுலகத்தை;  இங்கு  நின்
அருளினால்-   இங்கு.    இவ்வயோத்தியிலிருந்தே  உனது  அருளின்
உதவியால்; இனிதின் ஓம்பினேன்- இனிமையுறக் காத்து வந்தேன். 

தலைவர்கள்:     குடிமக்களுக்குத்   தலைமை     பூண்டவர்களான
அரசர்கள்  சூரியன்  எங்கும்  வெப்பத்தையும்.   ஒளியையும்   பரப்பி.
உயிர்களைக்     காப்பது     போல.     சூரிய       குலவேந்தர்கள்
அச்சூரியனைக்காட்டிலும்   சிறப்பாகத்   தமது    குலத்தை   விளங்கச்
செய்தனர்  என்பது  கருத்து.  மங்குதல்: அழிதல்.  குறைதல்   என்னும்
பொருள்  உடையது.  இங்கு  ‘மங்குநர்’ புகழில்  குறைந்தவர்  என்னும்
பொருளில்  வந்தது.  தரணி.  ‘வையகம்’  இரண்டும்   உலகம்   என்ற
பொருள்  உடையன.  ‘மங்குநர்’  என்பதிலுள்ள  ‘நர்’   பெயர் விகுதி.
‘வையகம்’ வையம் எனவும் வழங்கப்பெறும்.                      2