திரு அவதாரப் படலம் - 180

bookmark

புதல்வரில்லாக் குறையைத் தசரதன்
வசிட்டனுக்குக் கூறுதல் (180-183)

180.    

ஆயவன். ஒரு பகல். அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது. ‘தொல் குலத்
தாயரும். தந்தையும். தவமும். அன்பினால்
மேய வான் கடவுளும். பிறவும். வேறும். நீ;
 
ஆயவன்-      (மேலே     அரசியல்     படலத்தில்     கூறிய
அப்பெருமையெல்லாம்  பொருந்தியவனான) அந்தத்  தயரத   மன்னன்;
ஒருபகல் அயனையே நிகர் தூயமாமுனிவனைத் தொழுது- ஒரு நாள்
பிரமனுக்கு  ஒப்பாகத்  திகழும் தூய்மை  பொருந்திய  மாமுனிவனாகிய
வசிட்ட   முனிவனை   வணங்கி;  தொல்குலத்தாயரும்.  தந்தையும்.
தவமும்-  பழமை  பொருந்திய எமது   குலத்தாய்மாரும்  தந்தைமாரும்
தவப்பயன்களும்; அன்பினால் மேயவான் கடவுளும்- அன்பு கொண்டு
நான்   விரும்பும்  கடவுளும்;  பிறவும்  வேறு  நீ-   மற்றையோரும்.
வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களேதாம்.

தவம்:     புண்ணியமும்ஆம்.  வான்:  உண்மை  என்றும் பொருள்
கூறலாம்.  ‘பிறவும் வேறும்’ என்பது இங்குக்  கூறப்படாத  மற்றஎல்லாம்
என்ற   பொருள்   தந்து   நின்றது.  வசிட்டரை   மன்னன்   எப்படி
மதித்துள்ளான்  என்பது  இதனால் புலப்படும். இது  குளகம்  நான்காம்
பாடலின் “என்றுளன்” எனவரும் சொல்லுடன் முடியும்.             1