தாடகை வதைப் படலம் - 412
தாடகை மலைகளை வீசுதலும்
இராமன் அவற்றை விலக்குதலும்
412.
அல்லின் மாரி அனைய நிறத்தவள்.
சொல்லும் மாத்திரையின். கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின். வீரன் விலக்கினான்.
அல்லின் மாரி அனைய நிறத்தவள்- இருட்டில் பெய்யும் மழை
போன்ற கரிய நிறம் கொண்ட தாடகை; சொல்லும் மாத்திரையின் -
ஒரு சொல் சொல்லும் கால அளவிலேயே; கடல் தூர்ப்பதோர்
கல்லின் மாரியே - கடலையும் தூர்த்துவிடக் கூடியதான கற்களை
மலைபோல; கைவகுத்தாள் - கைகளால் எடுத்து வீசினாள்; அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் - அதனை. தனது
வில்லிலிருந்து பொழியும் அம்பு மழையினால் வீரனாகிய ராமன்
விலக்கலானான்.
அல்: இருட்டு. மாரி: மழை. இருட்டில் பெய்யும் மழை. அல்லது
இருளாகிய மழை எனவும் தகும். தாடகையின் கரிய நிறத்தை
இவ்வாறு கூறினார். மாத்திரை: கால அளவு. கைவகுத்தல்: கைக்கடுமை
காட்டல். ‘வில்லின் மாரி’ இதில் ‘மாரி’ உவமை ஆகு பெயராய்
அம்புகளை உணர்த்தும். வீரன்: வீரம் மிக்கவன். தாடகையின்
கொடிய தோற்றம் கண்டும் அவளது போர்ச்செயல் கண்டும்
வீரத்துடன் போர் புரியும் திறத்தைக் காட்டும். தாடகையின் கல்
மழையை. இராமபிரானது அம்புமழை தடுத்தது என்பது கருத்து. 49
