தாடகை வதைப் படலம் - 411

bookmark

இராமபிரான் தாடகையின் சூலத்தை
இருதுண்டாக்குதல்

411.

மாலும். அக் கணம் வாளியைத் தொட்டதும்.
கோல வில் கால் குனித்ததும். கண்டிலர்; 
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.
 
மாலும்   அக்கணம்  வாளியைத்  தொட்டதும்  -   திருமாலின்
அவதாரமான   ராமபிரான்   அக்கணமே   அம்பைத்    தொடுத்ததும்;
கோல  வில்   கால்   குனித்ததும்   -  அழகிய  தனது  வில்லின்
நுனியை     வளைத்ததும்    ஆகிய    செயல்களை;  கண்டிலர்  -
விண்ணகத்துத்   தேவரும்   மண்ணில்  நின்ற முனிவரும் கண்டாரிலர்;
காலனைப்   பறித்து   அக்கடியாள்   விட்ட  -  யமனை  அவன்
இடத்திலிருந்து  பறித்துச்  சூலவடிவாக்கி   அக்கொடிய  அரக்கி   வீச
அந்த;    சூலம்   அற்றன   துண்டங்கள்   கண்டனர்  -  சூலம்
சிதைந்துபோய்ப் பலதுண்டங்களாக வீழ்ந்ததைப் பார்த்தனர்.

மால்:   அழகு. இங்குத் திருமாலின் அம்சமான ராமனைச்  சுட்டியது.
வாளி.  அம்பு.  தொட்டது:  தொடுத்தது.  கோலம்:  அழகு.   வில்கால்:
வில்லின்  முனை.  குனித்தல்:  வளைத்தல். காலன்: எமன்.    பறித்தல்:
எடுத்தல்.  கடியாள்: கடுமை உடையவள். அற்றன:   வினையாலணையும்
பெயர்.    பகுதி    இரட்டித்துக்    காலம்   காட்டியது.     துண்டம்:
துண்டிக்கப்பட்ட   சிறுபகுதி.   தாடகை   ஏவிய    சூலத்தை   ராமன்
அழித்தமை கூறப்பட்டது.                                    48