தாடகை வதைப் படலம் - 410

bookmark

தாடகைவீசிய சூலம் இராமனைநோக்கி வருதல்

410.

புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ. முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல். உவா
மதியின்மேல் வரும் கோள் என. வந்ததே.
 
புதிய  கூற்று அனையாள்-  புதிய   எமனைப்   போன்றவளாகிய
தாடகை; புகைந்து ஏவிய  கதிர்கொள்  மூவிலைக்  காலவெம்தீ  -
கோபித்து  வீசிய  ஒளிபொருந்திய  இலை போலும் மூன்று முனைகளை
உடைய  பகைவர்களுக்கு  இறுதிக்   காலம்   தரும்  கொடிய தீயாகிய
அந்தச் சூலமானது; முனி  விதியை மேற்கொண்டு நின்றவன்மேல் -
முனிவனது   கட்டளையை  மேற்கொண்டு  நின்ற  இராம   பிரான்மீது;
உவாமதியின் மேல்வரு கோள்  எனவந்ததே  - முழுமதியின் மேல்
வரும் இராகு என்னும் கோள் போலப் பாய்ந்து வந்தது.

முன்பு   ‘’நாற்றம்  கேட்டலும்  தின்ன  நயப்பதோர்  கூற்றுண்டே’’
எனக்  கூறியதற்  கேற்ப.  இங்குப்  ‘’புதிய   கூற்றனையாள்’’  என்றார்.
முன்பு   ‘’செங்கைச்   சூல   வெந்தீ’’    என்றதற்கேற்ப  ‘’மூவிலைக்
காலவெந்தீ’’  என்றார்.  கதிர்: ஒளிக்கற்றை.  விதி: கட்டளை.  உவாமதி:
முழுமதி.  ‘கோள்’  எனப்  பொதுவாகக்   கூறினாலும்  ராகு  என்னும்
கோளே   மதியைப்  பிடிப்பாதலின்  இங்கு   ‘ராகு’  என்று  பொருள்
கூறப்பட்டது. காலம்: உயிர்களுக்கு இறுதிசெய்யும் காலமாம்.        47