தாடகை வதைப் படலம் - 404
இவள் பெண் அல்லள் எனல்
404.
‘கறங்கு அடல் திகிரிப்
படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்!
பெரியோரொடும்
மறம்கொடு. இத் தரை மன்னுயிர்
மாய்த்து. நின்று.
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும்
வேண்டுமே?
கறங்கு அடல் திகிரிப்படி காத்தவர்- எங்கும் சுழன்று வரும்
ஆணையாகிய சக்கரம் செலுத்தி உலகைக் காத்தவர்; பிறங்கடை
பெரியோய் - மரபில் வந்த பெரியோனே!; ‘மறம் கொடு
பெரியோரொடும் - பாவச் செயலை மேற்கொண்டு. பெரியோர்களாகிய
முனிவரோடும்; இத்தரை மன் உயிர்மாய்த்து நின்று - இப்பூமியில்
உள்ள உயிர்களை எல்லாம் அழித்து நின்று; அறம் கெடுத்தவட்கு
ஆண்மையும் வேண்டுமோ - அறத்தை அழித்தவளாகிய இவளுக்கு
ஆண்வடிவம் வேண்டுவதோ!
கறங்குதல்: சுழல்தல். திகிரி: ஆணையாகிய சக்கரம். படி: நிலம்.
காத்தவர்: சூரிய குலத்தரசர்கள். பிறங்கல்: விளங்கல். மறம்: பாவம்.
அடைபெரியோய்; வினைத்தொகை. மன்னுயிர்: நிலைபெற்ற உயிர்கள்.
மாய்த்து: அழித்து.’’ ஆண்மை: இங்கு ஆண்வடிவத்தை உணர்த்திற்று.
சூரிய குலத்தரசர் மேலும் விளக்கமுறவந்து தோன்றிய ராமனைப்
‘பெரியோய்’ என்றார். பெண் உருவிலே இத்தனை பேரழிவு செய்து
அறம்கெடுத்த இவளுக்கு ஆண் உருவம் வேண்டுமோ?
வேண்டுவதில்லை. என்பது கருத்து. 41
