தாடகை வதைப் படலம் - 386
தாடகை உயிரினத்தையே ஒழித்து விடுவாள் எனல்
386.
‘முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்’ என்றான்
முன் உலகளித்து - முற்பட உலகத்துயிர்களை யெல்லாம் காத்து;
முறை நின்ற உயிரெல்லாம் - (அவ்வாறு காக்கப்பட்டதால்) முறையே
நிலைத்து நின்ற உயிர்களை எல்லாம்; தன் உணவு எனக்கருது -
தனது உணவு பொருள் போலவே என்னும்; ?தன்மையவள் மைந்தா -
தன்மையுடையவள். தயரதனது மைந்தனே!; என் இனி உணர்த்துவது -
இனிச் சொல்லவேண்டியதென்ன உண்டு; இனிச்சிறிது நாளில் -
இன்னும் சில நாட்களி்லே; மன்னுயிர் அனைத்தையும் - நிலைபெற்ற
உயிர்களை எல்லாம்; வயிற்றின் இடும் என்றான் - வயிற்றிலே
போட்டுக்கொள்வாள் என்றான்.
தயரதன். மன்னுயிர். தன்னுயிர் எனக்கருதுபவன். தாடகையோ
மன்னுயிர் கொன்று திரிபவள் எனத் தாடகையின் கொடுமையைத்
தயரதனுடைய பெருமையைக் கூறியுணர்த்துவதாக அமைந்திருப்பது
சிறப்பு.
உலகளித்தல்: பரிபாலித்தல் மன்: பெருமை. 27
