தாடகை வதைப் படலம் - 385

bookmark

இராவணன் ஆணையால் இவள்
இன்னல் செய்கின்றாள் எனல்

385.

‘இலங்கை அரசன் பணி
   அமைந்து. ஓர் இடையூறா.
விலங்கல் வலிகொண்டு. எனது வேள்வி
   நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே! - அவள்
   இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று
   திரிகின்றாள்;
 
இலங்கை  அரசன்  பணி  அமைந்து-   இலங்கை   வேந்தனான
இராவணனுடைய  கட்டளையை மேற்கொண்டு; விலங்கல் வலிகொண்டு
-  மிருக  பலம்  கொண்டவளாய்  (எனக்கு); ஓர் இடையூறாய் - ஒரே
இடையூறாக  இருந்து  கொண்டு;  எனது  வேள்வி  நலிகின்றாள்  -
(அரக்கர்கள்)      எனது       வேள்வியை      (நிறைவேறவிடாமல்)
துன்புறுத்துகின்றாள்;  அலங்கல்  முகிலே  -  மாலையணிந்த  மேகம்
போன்றவனே!; அவள்  இவ்வங்க நிலம் எங்கும் - அவ்வரக்கி. இந்த
அங்க  நாட்டில்  வாழ்பவர்களை  எல்லாம்;  குலங்களொடு அடங்க -
அவர்களது குலத்தோடு முழுதும்; நனிகொன்று திரிகின்றாள் - மிகவும்
அழித்துக்  கொன்று  திரிந்து  கொண்டிருக்கிறாள்;  பணி -  கட்டளை
(வேலையுமாம்). 

பணி:  கட்டளை (வேலையுமாம்). வலி: மிருகபலம்  (மூர்க்கத்தனமான
வலிமை). நலிதல்: வருத்துல் அலங்கல்: மாலை. முகில்: மேகம்.   இந்தப்
பகுதியெல்லாம்:  அங்கநாடு.  இங்கு  வாழ்பவர்களை   எல்லாம்  இந்த
அரக்கி   குலத்தோடு   கொன்று   தின்று  திரிகிறாள்.   இராவணனது
கட்டளைப்படி  அரக்கர்கள்  எனது   வேள்விக்கு   இடையூறு  செய்து
துன்புறுத்துகின்றனர் என்றான். முனிவன் என்பது கருத்து.          26