தாடகை வதைப் படலம் - 384

bookmark

தாடகையால் இவ்வனம் வளம் அழிந்தது எனல்

384.

‘உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்.
கிளப்ப அருங் கொடுமையை அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்;
 
உளம்   பரும்  பிணிப்பு  அறா-  உள்ளத்தில் பருத்த  பிணிப்பு
நீங்காத; உலோபம்  ஒன்றுமே  -  உலோபகுணம்  ஒன்று  மட்டுமே;
அளப்ப  அரும்  குணங்களை  - அளப்பதற்கரியபல  நற்குணங்களை
எல்லாம்;  அழிக்கும்  ஆறுபோல் - அழிக்கின்ற தன்மையைப் போல;
கிளப்ப   அரும்  கொடுமைய   அரக்கி   -   சொல்ல   முடியாத
கொடுமைகளை  உடைய  இந்த  அரக்கி;  கேடு  இலா  வளம் பரும்
மருதவைப்பு -  கேடே  இல்லாத வளம் நிறைந்த இந்த மருத நிலத்தை
எல்லாம்; அழித்து  மாற்றினாள்  -  கொன்று.  தின்று பாலைநிலமாக
மாற்றிவிட்டாள்.

உளம்+பரும்+பிணிப்பு+அறா:    உளப்பரும் பிணிப்பறா;  உள்ளத்தின்
பெரிய  பிணிப்பு  நீங்காத.   உலோபம்:   ஈகையற்ற  தன்மை. குணம்.
குலம்.  கல்வி. கேள்வி.  அறிவு.  ஆற்றல் ஆகியபல நல்ல குணங்களை
உடையவராயினும்  உலோபம்   என்ற   ஒன்று  இருந்தால் அந்த நல்ல
குணங்களை  அழித்துவிடும்.   அது   போல வளம்மிக்க மருதநிலத்தை
அழித்துப்  பாலைநிலமாக்கி   விட்டாள்.   அத்தகைய கொடிய அரக்கி
இவள்  என்றான்.  விசுவாமித்திரமுனிவன்   என்பது   பொருள். முதல்
இரண்டடிகள் உவமையணியாகும்.                             25