தாடகை வதைப் படலம் - 360
360.
உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ் சுரம்.
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும் முனிவனை வணங்கிக் கூறுவான்;
உள்ளிய காலையின்- அவ்வாறு அவ்விருவரும் அம்மந்திரங்களை
எண்ணியபோது; ஊழித் தீயையும் எள்ளுறு - ஊழிக் காலத்துப் பெரு
நெருப்பையும் இகழக் கூடியதான; கொழுங்கனல் எரியும் வெஞ்சுரம் -
மிகுந்த நெருப்புப் பற்றி எரியும் வெம்மை மிகுந்த அப்பாலைவனம்;
தெள்ளு தண்புனலிடைச் சேறல் ஒத்தது - தெளிந்த குளிர்ந்த
நீரினிடையே செல்லுதல் ஒத்திருந்தது (அப்போது); வள்ளலும்
முனிவனை வணங்கிக் கூறுவான் - இராமபிரானும் அம்முனிவனை
வணங்கிக் கூறலுற்றான்.
காலை: காலம். ஊழி: யுகமுடிவு. எள்ளுறு இதில் ‘’உறு’’
துணைவினை. கொழுமை+கனல்: கொழுங்கனல்: பண்புத்தொகை.
சேறல்: செல்லுதல் தெள்ளுதண்: ‘உ’ சாரியை புனலிடை: ‘இடை’
ஏழனுருபு. வெம்மை+சுரம்: வெஞ்சுரம்(பண்புத் தொகை). முனிவர்
கற்றுத் தந்த மந்திரங்களை இராம. இலக்குவர் மனத்தில் எண்ணினர்.
அவ்வாறு எண்ணியபோது. ஊழித்தீயையும் இகழும்படியான மிகுந்த
வெம்மையை உடைய அப்பாலைவனம் குளிர்ந்த நீரிலே
செல்லுதலைப் போன்ற தாயிற்று என்பது குறிப்பு. ந்திரத்தின்
ஆற்றலால் பாலையின் கொடுமை தோன்றவில்லை என்பது கருத்து. 19
