தாடகை வதைப் படலம் - 361

bookmark

இராமன் வினவுதல்

361.

‘சுழி படு கங்கைஅம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம். அறிஞ! கூறு’ என்றான்.
 
சுழிபடுகங்கை அம்தொங்கல் மோலியான்- சுழித்து வரும்  நீர்ப்
பெருக்கை   உடைய    கங்கையும்.  கொன்றை  மாலையும்  அணிந்த
முடியை உடைய  சிவபிரானது;  விழிபட  வெந்ததோ - நெற்றிக்கண்
பட்டு இப்படி வெந்துபோனதோ?;; வேறு தான் உண்டோ - அல்லது
வேறு  காரணம் ஏதேனும்  உண்டோ?;    பழிபடா   மன்னவன் -
பழிச்சொல் படாத மன்னனாகிய எம் தந்தை; பரித்த நாட்டின் ஊங்கு
-  நல்லாட்சி செய்யும் நாட்டிலும் இவ்விடம்; அழிவதென் காரணம் -
இப்படி அழிந்து போதல் என்ன காரணமோ?; அறிஞ! கூறு என்றான்
- யாவுமறிந்த பெரியோய்! சொல்லுக என்றான்.

அழி:     பகுதித்      தொழிற்பெயர்.     தொங்கல்:    மாலை
(தொங்குமாறணிவது).  மோலி:  மகுடம்  (இங்குச் சடைமுடி). ‘’விழிபட
வெந்ததோ?   வேறுதானுண்டோ?’’   என்றது   ஐயவணி.   பழிபடா:
பழிக்காளாகாத.  அறிஞ:  அண்மைவிளி. ஊங்கு: முன்புள்ள இடத்தை
உணர்த்தும்.  ‘உப்பக்கம்’  என்பர் வள்ளுவர். அது போன்றது  என்க.
‘விழிஎனக்  கூறினும்  இங்கு  நெற்றிக்கண்ணை  உணர்த்தும். தீக்கண்
அதுதானே!                                               20