தாடகை வதைப் படலம் - 357
357.
பொரி பரல் படர்நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின். பெரு வழி விளங்கித் தோன்றலால்.
அரி மணிப் பணத்து அரா - அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே!
பொரி பரல் படர் நிலம் - சூரிய வெப்பத்தால் பொரிந்துள்ள
சிறுகற்கள் எங்கும் விரிந்து கிடக்கும் அந்தப் பாலைவனம்: பொடிந்து
கீழ் உற விரிதலின் - பிளவுபட்டு. பாதளத்துக் கீழும் அகழ்ந்து
போயிருப்பதால்; பெருவழி விளங்கித் தோன்றலால் - பெருத்த
இடைவெளி விளக்கமாகத் தோன்றுவதால்; அரி மணிப்பணத்து அரா
அரசன் நாட்டினும் - பொன்னிறமும். மணியையும் உடைய
பாம்பரசனது நாடாகிய நாகலோகத்தினும்; எரிகதிர்க்கு இனிதுபுக்கு
இயங்கல் ஆயதே - எரிந்து வெப்பம் வீசும் சூரியனுடைய
கிரணங்களுக்கும் இதே புகுந்து இயங்கமுடிந்தது.
பொரிபரல்: பொரிந்த பரல்கற்கள் (வினைத்தொகை). படர் நிலம்:
வினைத் தொகை. பொடிதல்: புழுதியாதல். கீழுறவிரிதல்: கீழ்வரை
வெடித்தல். அரிமணி: உயர்ந்த மணியுமாம். பணம்: படம். அரா அரசு:
பாம்புகளின் அரசன் (ஆதி சேடன்). எரிகதிர்: வினைத்தொகை.
இயங்கல்: சஞ்சரித்தல். ஆயது: ஆகியது.
சூரிய வெப்பத்தால் பாலை நிலம் பிளந்து - சூரியனுடைய கதிர்கள்
நுழைந்து சஞ்சரிக்கும்படி இருந்தது என்பது கருத்து. 16
