தாடகை வதைப் படலம் - 358

bookmark

பாலையின் வெப்பத்தால் அரசிளங்குமரர்
வருந்துவர் என விசுவாமித்திரர் எண்ணுதல்

358.

எரிந்து எழு கொடுஞ் சுரம்
   இனையது எய்தலும்.
அருந் தவன். ‘இவர். பெரிது
   அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும்.
   பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது’ என
   மனத்தின் நோக்கினான்.
 
எரிந்து  எழு கொடும்சுரம்  -  காய்ந்து எழுகின்ற கொடிய பாலை
நிலமான;   இனையது   எய்தலும்   -   இத்தன்மையான  நிலத்தை
அடைதலும்;   அரும்தவன்   - அரியதவத்தை உடைய விசுவாமித்திர
முனிவன்;   இவர்  பெரிது  அளவில்  ஆற்றலைப்  பொருந்தினர்
ஆயினும்   -    இந்த    அரச   குமாரர்கள்  அளவற்ற   ஆற்றல்
வாய்ந்தவரானாலும்; பூவின் மெல்லியர்  -  மலரி்னும்  மென்மையான
உடலைஉடையவர்  ஆதலால்; வருந்துவர்  சிறிது   என  மனத்தின்
நோக்கினான்  -  சிறிதளவேனும்   வருந்துவர்    என்று.   மனத்தில்
எண்ணி அவர்களைப் பார்த்தான்.

எரிந்து:   காய்ந்து.   கொடுஞ்சுரம்:   கொடுமையான   பாலைநிலம்.
மனத்தின் நோக்கினான்: மனத்தில் ஆழ்ந்து சிந்தித்தான்.          17