தாடகை வதைப் படலம் - 354
பேய்த் தேரின் தோற்றம்
354.
கானகத்து இயங்கிய கழுதின்
தேர்க் குலம்.
‘தான் அகத்து எழுதலால்
தலைக்கொண்டு ஓடிப்போய்.
மேல் நிமிர்ந்து எழுந்திடில்
விசும்பும் வேம்’ எனா.
வானவர்க்கு இரங்கி. நீர்
வளைந்தது ஒத்ததே!
கானகத்து இயங்கிய- அந்தக்கொடிய பாலைவனத்திலே விளங்கித்
தோன்றிய; கழுதின் தேர்க்குலம் - பேய்த்தேராகிய கானல் நீர்;
அகத்து தான் எழுதலால் - அப்பாலை வனத்தகத்து வெம்மை தான்
எழுதலாலே; தலைக்கொண்டு ஓடிப்போய் - (அது) மிகுதிப்பட்டு
ஓடிச்சென்று; மேல் நிமிர்ந்து எழுந்திடில் - மேலே நிமிர்ந்து எழுந்து
விட்டால்; விசும்பு வேம் எனா - ஆகாயம் வெந்து போகும்என
நினைத்து; வானவர்க்கு இரங்கி -விண்ணுலகத்தினரான
தேவர்களுக்காக இரங்கி; நீர்வளைந்தது ஒத்ததே -நீர்க்கடவுள்
(வருணன்) அந்த வெப்பத்தை மேலே செல்லவிடாமல் கீழ்நோக்கிச்
செலுத்தியது போன்றது.
கான்+அகம்: கானகம் என்ற ஒரு சொல்லாய்க் காட்டை உணர்த்தும்.
கழுது: பேய். கழுதின் தேர்: பேய்த்தேர் (கானல் நீர்). குலம்: கூட்டம்.
தலைகொண்டோடுதல்: வரம்பு மீறுதலாம். மேல்: வானம் என்றுமாம்.
அப்பாலை நிலம் முழுமையும் காணப்படும் கானல் நீர்
மேலெழுந்தால் விண்ணையும் வேகச்செய்யுமே என வானவர்க்கு
இரக்கப்பட்டு நீர்க்கடவுள் (வருணன்) பாலை நிலம் முழுமையும்
நீரினால் வளைத்துக் கொண்டது போலக் காணப்பட்டது. எ ன்பது
கருத்து. இது தற்குறிப்பேற்ற அணியாகும். 13
