தாடகை வதைப் படலம் - 355

bookmark

355.    

ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல் - தேர்.
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே!
 
ஏய்ந்த  அக்கனலிடை- அப்பாலை வனத்திலே பொருந்திய  அந்த
நெருப்பு  மயமான  நிலத்திலே;  எழுந்த  கானல்தேர்  -  தோன்றிய
பேய்த்தேரின்  தோற்றம்;  காய்ந்த அக்கடு வனம் - எல்லாம் காய்ந்து
போன   கடுமை  வாய்ந்த  அப்பாலைவனத்தை;  காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு  -  ஆட்சிபுரியும்  வேனில்காலம்  என்னும்  அரசனுக்கு;
அரச வீற்று இருக்க - திருவோலக்கமா வீற்றிருக்க; செய்தது  ஓர்  -
செய்யப்பட்டதாகிய ஒப்பற்ற  ஒரு;  பாய்ந்த  பொன்  கால்உடை  -
உருக்கிப்  பாய்ந்த பொன்னாலான கால்களை உடையதுமான; பளிங்குப்
பீடமே- பளிங்கினால் செய்த ஆசனமே போலுமாம்.

ஏய்ந்த:   பொருந்திய.    அக்கடுவனம்:     அதிக    வெப்பமான
பாலைவனம்.    வேந்து:    வேனில்   அங்குத்  தனியாட்சி  புரிவதால்
இவ்வாறு  கூறினார்.  பாய்ந்த  பொன்:    உருக்கிப்  பாய்ச்சிய பொன்.
பீடம்:    இருக்கை.    அப்பாலைவனத்துப்   பேய்த்தேரின்  தோற்றம்
வேனில்  வேந்தன்  அங்குத் தனியரசு செய்ய - அவன்  அமர்வதற்காக
அமைந்த பளிங்குப் பீடம் போன்றிருந்தது என்பது கருத்து.        14