தாடகை வதைப் படலம் - 347

bookmark

347.

படியின்மேல் வெம்மையைப்
   பகரினும். பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும்
   வான் முகடும் வேம்;
விடியுமேல். வெயிலும் வேம்; மழையும்
   வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில்.
   வேறு யாவை வேவாதவே?
 
படியின்மேல்  வெம்மையைப் பகரின்  -  இப்பாலை  நிலத்தின்
வெப்பத்தைச் சொன்னாலும்; பகரும்நா முடியவேம்- சொல்லும் நாவும்
முழுதும்  வெந்து போகும்; முடிய மூடு இருளும் வான்முகடும் வேம்
- முற்றும்  மூடியுள்ள  இருட்டும்  வானத்து உச்சியும் வெந்து போகும்;
விடியுமேல் வெயிலும் வேம் - விடிந்த பின்னாயின் சூரியகிரணமுமே
வெந்து  போகும்;  மழையும்வேம்  மின்னினோடு  இடியும்  வேம்
- மேகமும்  மழையும்  வேகும்  மின்னலுடன் இடியும் வெந்து போகும்;
என்னில்  வேவாதவை யாவை  -  என்று  சொல்லக்  கூடுமானால்
அப்பாலையின்   வெப்பத்தால்  வேகாதவை  எவை?  (ஒன்றுமில்லை
என்பதாம்).  

படி:  நிலம்.  இங்குப்   பாலை  நிலத்தை உணர்த்திற்று. வெம்மை:
வெப்பம்.  பண்புப்பெயர்.  பகரு  நா:  வினைத்தொகை.  நாக்கு. சூரிய
வெப்பம்   அப்பாலை  நிலத்தின்   மணல்முழுதும்   படிந்து  நீங்காத
வெப்பமடைந்து  இரவிலும் கொதித்திருக்கும். விடிந்த  பின்  தோன்றும்
இளவெயிலையும்    வேகச்    செய்யும்   என்பார்   ‘    விடியுமேல்
வெயிலும்வேம்’  என்றார்.  வேறு+யாவை: வேறியாவை   (குற்றியலிகரம்)
ஏ: வினா.                                                 6